கியூபெக் மாகாணக் கல்வித் துறையில் நிலவும் சிறப்பு ஆதரவு வளங்களின் (Specialized Resources) பற்றாக்குறை மற்றும் நிதி வெட்டுக்கள் காரணமாகப் பல மாதங்களாக வீட்டிலிருந்தே கல்வி கற்று வந்தவரும் ஓட்டிசம் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவருமான சிறுமி ஒருவருக்குத் தற்போது புதிய பாடசாலையில் அனுமதி கிடைத்துள்ளது.
மொண்ட்ரியலின் தென் கரைப் பகுதியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் (St. Lawrence) பாடசாலையில் கல்வி கற்று வந்த எல்லி (Ellie) என்ற 10 வயது சிறுமி, ஓட்டிசம் மற்றும் வாசிப்புக் குறைபாட்டினால் (Dyslexia) பாதிக்கப்பட்டவராவார்.
கடந்த ஆண்டில் வகுப்பறையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு கல்வித் தொழில்நுட்ப வல்லுநரின் (Special Education Technician) ஆதரவு திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அச்சிறுமி மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதன் காரணமாக அச்சிறுமியின் தாயாரும் பாடசாலை நிர்வாகமும் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய, கடந்த நவம்பர் மாதம் முதல் அவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டு, வாரத்திற்கு மூன்று நாட்கள் தினமும் 2 மணிநேரம் மட்டுமே வீட்டிலிருந்தவாறு தனியார் ஆசிரியரின் மூலம் கல்வி கற்று வந்தார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது அந்த சிறுமிக்கு புதிய வகுப்பறைச் சூழலில் கற்பதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடசாலைகளில் கல்விச் சேவைகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.



