கியூபெக் மாகாணத்தில், பொதுக் கொள்முதல் மற்றும் குத்தகை ஒப்பந்த நடைமுறைகளைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை ஆணையமான ‘அதோரித்தே தே மார்ஷே புப்ளிக்’ (Autorité des marchés publics – AMP), c (Santé Québec) மற்றும் சுகாதார அமைச்சு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
நிதி மற்றும் கொள்முதல் தகவல் அமைப்பிற்கான (SIFA) கணினித் திட்டத்தில், வெளிப்படையான போட்டி அடிப்படையிலான ஏலச் செயல்முறைகளைத் தவிர்த்து, விதிகளுக்குப் புறம்பாக ஒப்பந்தங்களை வழங்கியதாக ‘அதோரித்தே தே மார்ஷே புப்ளிக்’ ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
வியாழக்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், ‘சாந்தே கியூபெக்’ தனது கொள்முதல் அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை உடனடியாக முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என, அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், விதிமீறல்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள் மற்றும் புதிய செயற்பாட்டுத் திட்டம் (Action plan) குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு சுகாதார அமைச்சை ‘அதோரித்தே தே மார்ஷே புப்ளிக்’ ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் 96 மில்லியன் கனேடிய டொலர்களாக மதிப்பிடப்பட்ட அபிவிருத்திச் செலவு, கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 330 மில்லியன் கனேடிய டொலர்களாக உயர்ந்துள்ளதை, அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.


