மொன்றியல் பெருநகரப் பிராந்தியத்தின் கீழ் உள்ள டொலார்ட்-டெஸ்-ஓர்மோ (D.D.O.) நகரப்பகுதி மக்கள், அண்மைக்கால வெள்ளப் பாதிப்புகளுக்குப் பின்னர் தங்களது நகர நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
அதேநேரம், அண்டை நகரமான பாயிண்ட்-கிளேர் (Pointe-Claire) நகராட்சி மன்றம் வெள்ள நிவாரணம் மற்றும் எதிர்கால வெள்ளக் கட்டுப்பாடு தொடர்பான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி வருவதாக அம்மாநில மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, மொன்றியலின் மேற்குத் தீவுப் பகுதிகளில் (West Island) உள்ள எண்ணற்ற வீடுகளின் அடித்தளங்களுக்குள் (Basements) வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்கவும், கழிவுநீர்க் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் டி.டி.ஓ. நகராட்சி மன்றம் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கத் தவறிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் வெள்ளப் பெருக்கு காரணமாகத் தங்களின் சொத்துக்கள் பாழடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் டொலார்ட்-டெஸ்-ஓர்மோ நகர வாசிகள், நகரசபையானது வெள்ளக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்புகளில் உரிய முதலீடுகளைச் செய்யவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், வெள்ளப் பாதிப்பு தொடர்பான பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டங்களை, டொலார்ட்-டெஸ்-ஓர்மோ நகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, அண்டை நகராட்சியான பாயிண்ட்-கிளேர் (Pointe-Claire) பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது.
பாயிண்ட்-கிளேர் நகராட்சி நிர்வாகம், வெள்ளத் தடுப்புச் சாதனங்களான ‘சம்ப் பம்ப்’ (Sump Pump) மற்றும் வடிகால் அமைப்புகளை (French Drains) வீடுகளில் பொறுத்துவதற்காகக் குடியிருப்பாளர்களுக்கு 5,000 டொலர் வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
மேலும், மாகாண அரசின் 6.8 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் 11 உள்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுத்துள்ள பாயிண்ட்-கிளேர், மழைநீரைத் தேக்கி வைக்கும் ‘ஸ்பாஞ்ச் பார்க்’ (Sponge Park) திட்டங்களையும் விரைவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


