கியூபெக் மாகாணத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவெனீர் கியூபெக் கூட்டணி (CAQ) கட்சியின் தலைவரும் கியூபெக் மாகாண முதல்வருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette), லோங்கே (Longueuil) நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினார்.
வரவிருக்கும் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவைப் திரட்டும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பில், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மாகாணத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய கிறிஸ்டின் பிரெஷெட், தனது தலைமையிலான ஆளும் கட்சி கடந்த காலங்களை விட மாறுபட்ட அணுகுமுறையுடன் செயற்படும் எனக் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் பிரான்சுவா லெகோவின் விலகலைத் தொடர்ந்து கட்சித் தலைமையைப் பொறுப்பேற்ற அவர், மக்களுக்கான முதன்மைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக உறுதியளித்தார்.
குறிப்பாக, கியூபெக் மாகாணத்த்தில் மக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைத்தல், வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் கல்வித் துறையை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்கள் குறித்துப் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கிறிஸ்டின் பிரெஷெட் பதிலளித்தார்.
கல்வித் துறையில் பெரிய அளவிலான புதிய ஆய்வுக் குழுக்களை அமைப்பதை விட, நடைமுறையிலுள்ள கட்டமைப்பை வலுப்படுத்துவதிலேயே தமது அரசு கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

