நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமான மொன்றியல் துறைமுகத்தின் (Port of Montreal) முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறைமுகத்தின் பாரிய விரிவாக்கப் பணிகள் 1.16 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த துறைமுக நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடங்கள் ஒரு ‘நெருக்கடி நிலை’ என அரசியல் விமர்சகர்களால் வர்ணிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் மொன்றியல் துறைமுக நிர்வாகத்தின் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
மொன்றியல் துறைமுகத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி பால் பேர்ட் (Paul Bird) கடந்த மார்ச் மாதம் விலகியிருந்தார்.
தலைமை நிர்வாக அதிகாரியான ஜூலி காஸ்கன் (Julie Gascon) கடந்த 3 ஆம் திகதி திடீரென தனது பதவியிலிருந்து விலகினார்.
மொன்றியல் துறைமுகத்தின் தலைமை நிதி அதிகாரி அல்பன் ஃபோர்னியர் (Alban Fournier) நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், மொன்றியல் துறைமுக நிர்வாகத்தின் இந்த திடீர் மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக, கனடிய நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக்கான குழு நேற்று ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
விலகிச் சென்ற மூன்று அதிகாரிகளையும் சாட்சியமளிக்க அழைத்துள்ள எதிர்க்கட்சிகள், “விமானம் பறந்துகொண்டிருக்கும் போதே விமானியும் உதவி விமானிகளும் வெளியேறுவதைப் போன்றது இது” எனச் சாடியுள்ளனர்.
புதிய அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், துறைமுகத்தின் அன்றாடச் செயல்பாடுகளை, நியமிக்கப்பட்ட ஒரு விசேட குழு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
