மொன்றியல் காவல்துறையினர் தங்களை அநியாயமாக வழிமறித்து மிளகுத்தூள் தெளிப்புத் திரவத்தைச் (Pepper spray) செலுத்தித் துன்புறுத்தியதாகக் கறுப்பினக் குடும்பம் ஒன்று உத்தியோகபூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
மொன்றியல்-நோர்ட் (Montréal-Nord) பகுதியில், கடந்த ஆண்டு குடும்ப பார்பிக்யூ பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதே, மொன்றியல் காவல்துறையினர் தங்களைத் துன்புறுத்தியதாக, அக்குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் கறுப்பினக் குடும்பத்தினர் தங்களது வீட்டின் பின்புறத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட பார்பிக்யூ நிகழ்வை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த மொன்றியல் பொலிஸ் பிரிவின் ‘காவல் நிலையம் 39’ (Station 39) ஐச் சேர்ந்த அதிகாரிகள், அங்கிருந்தவர்கள் மீது எவ்வித முன்னறிவிப்போ அல்லது நியாயமான காரணமோ இன்றி மிளகுத்தூள் திரவத்தை மிக மோசமாகத் தெளித்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி, பொலிஸ் ஒழுக்காற்று சபையிடம் தற்போது உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.
ஏற்கனவே கறுப்பின மற்றும் அரபு மக்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகப் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அதே ‘காவல் நிலையம் 39’ இல் பணியாற்றும் அதிகாரிகளை மையப்படுத்தியே, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்றும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக நிறவெறிப் பாகுபாட்டில் (Racial profiling) ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியே இது என்றும் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.


