மொன்றியல் நகரத்தில் இயங்கும் சட்டவிரோத கும்பலின் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஸ்டீபானோ சொலெசிட்டோ (Stefano Sollecito – 58), தனக்கு ஏற்பட்ட கடுமையான உடல் வலி மற்றும் அசௌகரியம் காரணமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார்.
பிற்பகல் விசாரணை இடைவேளையின் போது, வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து எதிர்கொள்ள முடியாத அளவுக்குத் தனக்குக் கடுமையான வலி இருப்பதாகத் தனது பாதுகாப்பு வழக்கறிஞர் ஜியுசெப் பாட்டிஸ்டாவிடம் (Giuseppe Battista), ஸ்டீபானோ சொலெசிட்டோ தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஸ்டீபானோ சொலெசிட்டோ அன்றைய விசாரணையிலிருந்து விலகிக்கொள்ள அனுமதி அளித்தார்.
கடந்த ஆண்டு, மொன்றியல் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸாரின் ‘புராஜெக்ட் அலையன்ஸ்’ (Project Alliance) என்ற பிரம்மாண்ட நடவடிக்கை மூலம் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதில், சட்டவிரோத கும்பலின் மற்றொரு முக்கிய தலைவரான லியோனார்டோ ரிஸூட்டோவுடன் சேர்த்து சொலெசிட்டோவும் கைது செய்யப்பட்டிருந்தார்.
சொலெசிட்டோ புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கடந்தகால வழக்கு விசாரணைகளின்போதும் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
இதனால் அவர் வழக்கமாக சக்கர நாற்காலியிலேயே (wheelchair) நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்படுகிnறமை குறிப்பிடத்தக்கது.

