மத்திய அரசில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் விவகாரங்களில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த முன்னாள் அமைச்சரும், மொன்றியல் நகருக்கு உட்பட்ட ‘லோரியே-செயிண்ட் மேரி’ (Laurier—Sainte-Marie) தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவன் கில்போ (Steven Guilbeault), தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றப் பொதுச்சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, அவரது இராஜினாமா kஅடந்த வெள்ளிக்கிழமை முதல் முறைப்படி நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த மே மாதமே தாம் அரசியலை விட்டு விலகப் போவதாக கில்போ அறிவித்திருந்த நிலையில், தற்போது அவரது விலகல் உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சியின் புதிய சுற்றாடல் மற்றும் எரிசக்திக் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, தாம் இக்கடின முடிவை எடுத்ததாக கில்போ தெளிவுபடுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஆல்பர்ட்டா மாகாணத்துடன் மத்திய அரசு மேற்கொண்ட புதிய எரிசக்தி ஒப்பந்தம், குழாய் வழித் திட்டங்கள் (pipeline project) மற்றும் காலநிலை இலக்குகளைப் பிற்போக்காகக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் குறித்து அவர் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

