கியூபெக் மாகாணத்தில் ஏற்கனவே அமுலிலுள்ள சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மைச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட Bill 9 மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிறுபான்மையினக் குழுக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதோடு, தங்களது சட்டப் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளன.
அரசுப் பொது வாழ்வில் இருந்து, மத அடையாளங்களை முற்றாக நீக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் பல புதிய விதிகளைக் கொண்டுவந்துள்ளது.
ஹிஜாப், சீக்கியத் தலைப்பாகை, யூதக் குல்லாய் மற்றும் சிலுவை போன்ற மத அடையாளங்களை அணிவதற்கு, அரசு மானியம் பெறும் சிறுவர் காப்பக ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் உள்ள மத வழிபாட்டு அறைகள் (Prayer Rooms) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுப் பூங்காக்கள் அல்லது வீதிகளில் குழுவாகத் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வழிபட வேண்டுமானால் உள்ளூராட்சி மன்றங்களின் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“அரசு என்பது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்; அனைத்துக் குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்” என்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என, கியூபெக் அரசுத் தரப்பு கூறுகின்றமை குறிப்பிடத் தக்கது.
