கியூபெக் மாகாண சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியான பார்ட்டி கியூபெக்வா (PQ), பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் நோக்கில் ‘பில் 101’ (Bill 101) சட்டத்தை ‘சிஜெப்’ (CEGEP) எனப்படும் முன்-பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இத்தேர்தல் வாக்குறுதி மாகாணத்தின் அரசியல் மற்றும் கல்வித்துறையில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமோண்டன் (Paul St-Pierre Plamondon) இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது கியூபெக்கினை ஆளும் அரசின் கீழ் பிரெஞ்சு மொழியின் பயன்பாடு சரிந்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போதுள்ள விதிகளின்படி, கியூபெக்கில் உள்ள பிரெஞ்சு பாடசாலைகளில் தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்விக்காக ஆங்கில வழி ‘சிஜெப்’ (CEGEP) கல்லூரிகளையோ அல்லது பிரெஞ்சு வழி கல்லூரிகளையோ தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர்.
பார்ட்டி கியூபெக்வா கட்சி எதிர்வரும் மாகாணப் பொதுத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், பிரெஞ்சு பாடசாலைகளில் படித்த மாணவர்கள், ஆங்கில வழி ‘சிஜெப்’ கல்லூரிகளில் சேரத் தடை விதிக்கப்படுவதுடன், அவர்கள் கட்டாயமாக பிரெஞ்சு வழி கல்லூரிகளிலேயே தொடர வேண்டும் என்ற விதிமுறை சட்டமாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

