கியூபெக் மாகாணத் தேர்தலை முன்னிட்டு, மாகாணத்தின் உயர்கல்வித் துறை மற்றும் ஆங்கில வழியில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மொழிக் கொள்கைகள் ஆகியவை தொடர்பில் ‘தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு’ தனது விரிவான கோரிக்கைகளையும் நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்திலுள்ள பிரெஞ்சு மொழிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆங்கிலப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நிதியைச் சமமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று, ‘தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு’ கோரியுள்ளது.
உயர்கல்வியின் தரம் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, புதிய கியூபெக் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் உயர்கல்விப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
கியூபெக்கில் இயங்கிவரும் புகழ்பெற்ற மெக்கில் (McGill), கொன்கோர்டியா (Concordia) மற்றும் பிஷப்ஸ் (Bishop’s) முதலான ஆங்கில மொழிமூலப் பல்கலைக்கழகங்களுக்கான கட்டண உயர்வு, வெளிமாகாண மாணவர்கள் சேர்க்கை மற்றும் பிரெஞ்சு மொழித் தகுதி தொடர்பான, கியூபெக் அரசின் அண்மையக் கட்டுப்பாடுகள், உயர்கல்வித் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த காலங்களில் கியூபெக் அரசாங்கம் பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், ஆங்கில மொழிமூல பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிமாகாண மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியதுடன், பிரெஞ்சு மொழித் தேர்ச்சியையும் கட்டாயமாக்கியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

