கியூபெக் மாகாணத்தில் கோடைகாலம் ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு, மொன்றியல் பிராந்தியத்தில் உள்ள ஒன்பது முக்கிய வணிக வீதிகள் பாதசாரிகள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய விசேட வலயங்களாக (Pedestrian-Only Streets) மாற்றப்படவுள்ளன. மொன்றியல் மாநகர சபை உத்தியோகபூர்வமாக இந்த தகவலை
அறிவித்துள்ளது.
நகரின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், மக்கள் வாகன நெரிசல்களின்றிச் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் இத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
மொன்றியல் மாநகர முதல்வர் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விபரங்களை வெளியிட்டார். இம்முறை ஒன்பது வீதிகளில் மொத்தம் 9 கிலோமீட்டர் நீளமான சாலைப்பகுதிகள் முழுமையாகப் பாதசாரிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவென்யூ மொண்ட்-ரோயல் வீதியின் இரண்டு வெவ்வேறு பிரிவுகள் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. ரோஸ்மாண்ட் பிராந்தியத்தில் உள்ள முக்கிய வீதியான ரூ செயின்ட்- டெனிஸ் (Rue Saint-Denis) ஆனது, ஜூன் மாதம் 18 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரை பாதசாரிகள் வலயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
