கியூபெக் பால் உற்பத்தித் துறை, புகழ்பெற்ற உணவான ‘புட்டின்’ (Poutine) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ‘சீஸ் கர்ட்ஸ்’ (Cheese Curds) எனப்படும் பால் கட்டிகளுக்குச் சர்வதேச அளவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளது.
பிரான்சின் ‘ஷாம்பெயின்’ மதுபானத்தைப் போலவே, கியூபெக்கில் தயாராகும் இந்தச் சீஸ் வகையையும் ஒரு பிரத்யேக அடையாளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புட்டின் உணவு உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் நிலையில், கியூபெக்கின் பாரம்பரியத் தயாரிப்பு முறையைப் பாதுகாப்பது அவசியமாகிறது என, கியூபெக் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (CILQ) தலைவர் சார்லஸ் லாங்லோயிஸ் தெரிவித்துள்ளார்.
‘கியூபெக் புட்டின் சீஸ்’ (Quebec Poutine Cheese) என்ற முத்திரை இருந்தால் மட்டுமே, அது கியூபெக்கில் தயாரான உண்மையான சீஸ் என்பதை நுகர்வோர் உறுதி செய்யும் வகையில், செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான சான்றிதழ் பெறப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் அதிகாரிகள் உற்பத்தி நிலையங்களை ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
