கனேடிய கார்சினல் மார்க் ஊலெட் (Marc Ouellet) தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், அவர் குறித்து புகார் அளித்த பெண் நேற்று மொன்றியல் நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஊலெட் கூறி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில், கியூபெக் தேவாலயத்தில் பணியாற்றிய போது கார்சினல் ஊலெட் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் பமீலா குரோலோ (Paméla Groleau) என்ற பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
தேவாலய நிகழ்வுகளில் தாம் எங்குச் சென்றாலும் மார்க் ஊலெட் தம்மைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்க் ஊலெட் வலுக்கட்டாயமான முறையில் தமது உடல்பகுதிகளை தவறான முறையில் தொட்டுள்ளதாகவும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தனது கௌரவத்தைச் சிதைப்பதாகக் கூறி, மார்க் ஊலெட் பமீலாவுக்கு எதிராக 100,000 டொலர் நஷ்டஈடு கோரி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் வெற்றி பெற்றால், நஷ்டஈடாகக் கிடைக்கும் தொகையைக் கனடாவின் பழங்குடியினப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தானமாக வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மார்க் ஊலெட்டின் வழக்கறிஞர்கள் தாம் மேற்கொண்ட குறுக்கு விசாரணையின் போது, இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள அனைத்துச் சம்பவங்களும் பொது இடங்களிலேயே நடந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினர்.
கத்தோலிக்கத் திருச்சபையின் உயரிய பதவியில் இருந்த ஒருவர் மீது இத்தகைய விசாரணை நடப்பது மொன்றியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
