மொன்றியல் பிரைட் திருவிழாவை நடத்தும் ‘Fierté Montréal’ அமைப்பு, காசாவில் நடந்து வரும் ‘இனப்படுகொலையை’ கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த தனது நீண்டகால நடுநிலைமை நிலைப்பாட்டில் இருந்து ‘Fierté Montréal’ அமைப்பு, தற்போது வெளியேறியுள்ளமையை இது குறிக்கிறது.
பல மாதங்களாகப் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வந்ததோடு, திருவிழாவில் இருந்து விலகுவதாக ஒரு கலைஞர் மிரட்டல் விடுத்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், கனடாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய யூத LGBTQ+ குழுவான ‘Gaa’va’, தங்களுக்கு பிரைட் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
தங்கள் பிரதிநிதிகள் ‘வெறுப்புணர்வைக் கிளப்பும் அறிக்கைகளை’ வெளியிட்டதாக, ‘Fierté Montréal’ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதாகவும், ஆனால் தாங்கள் அந்த குற்றச்சாட்டினை மறுப்பதாகவும் ‘Gaa’va’ குழு கூறியுள்ளது.
இருப்பினும், எந்தெந்த குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதை ‘Fierté Montréal’ அமைப்பு நேரடியாகக் குறிப்பிடவில்லை.
வெறுப்புணர்வைக் கிளப்பும் விதமாகப் பேசுவோருக்கு அனுமதி மறுக்கப்படும் என்று மட்டுமே அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
