ஒட்டாவா நகரின் விமான நிலையத்திற்கு மேற்கே ஒரு சிறிய விமானம் வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
அந்த விமானத்தில் இருந்த மூன்று நபர்களில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், மூன்றாவது நபரின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்த விபத்து, Riverside Drive மற்றும் West Hunt Club Road சந்திப்புக்கு அருகே, மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
விபத்துக்குள்ளான விமானம் மரங்களிலும், மின்சாரக் கம்பிகளிலும் சிக்கியிருந்ததை அருகில் வசிப்பவர்கள் எடுத்த புகைப்படம் உறுதிப்படுத்துகிறது.
ஒட்டாவா அவசர சேவை அதிகாரிகள், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்ததுடன், விமானத்தில் சிக்கியிருந்த இருவரையும் மீட்க பெரும் முயற்சி மேற்கொண்டனர்.
விபத்துக்குள்ளான விமானம், தனிநபர் பயன்பாட்டிற்கான Grumman AA-5A வகை விமானம் என கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபை (TSB) தெரிவித்துள்ளது.
விமானம், விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றபோதே, மின்கம்பிகளில் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக விமானத்தில் இருந்த எரிபொருள் வெளியே கசிந்து, அருகிலுள்ள நீரோடையில் கலப்பதைத் தடுப்பதற்கு, ஒட்டாவா தீயணைப்புத் துறையின் சிறப்புப் பிரிவு குழுக்கள், நடவடிக்கை எடுத்து வருகின்றன.
