கியூபெக் மாகாணத்தின் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் இன்றைய தினம் திங்கள்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது.
கியூபெக் மாகாணத்தின் 127 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இடம்பெறுவதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமொண்டன், கொவாலிஷன் அவனீர் கியூபெக் கட்சியின் தலைவரான
கிறிஸ்டின் பிரெஷெட், லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மிலியார்ட், ‘கியூபெக் சொலிடேர்’ கட்சியின் இணைப் பேச்சாளர் ரூபா கஸால் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் எரிக் டுஹேம் ஆகிய ஐந்து முக்கிய தலைவர்களுக்கிடையே இத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
இம்முறை ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) கட்சி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள்
சுட்டிக்காட்டுகின்றன.
தங்களது கட்சி ஆட்சியமைத்தால் கியூபெக்கின் இறையாண்மை குறித்த தனிநாடு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பார்ட்டி கியூபெக்வா தலைவர் பிளாமொண்டன் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் 2029 ஆம் ஆண்டு வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தத் தேர்தலில் தகுதிபெற்ற வாக்காளர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியைப் பயன்படுத்தி,
தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்ததாக மாகாணத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

