கியூபெக் (Quebec) மாகாணத்தின் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், இம்முறை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிகளால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளே பிரதான தேர்தல் பிரச்சினையாக
உருவெடுத்துள்ளன.
வழக்கமாக கியூபெக் தேர்தல்களில் தனிநாடு அல்லது இறையாண்மை தொடர்பான விவாதங்களே முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த
தேர்தலில் அமெரிக்காவுடனான வர்த்தக முரண்பாடுகள் அந்த இடத்தைக் கைப்பற்றியிருந்தமை அவதானிப்புக்கு உள்ளாகியது.
பிரிவினைவாதக் கொள்கையைக் கொண்ட பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்
சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அமெரிக்க வர்த்தகப் போரினால் கியூபெக்கின் அலுமினியம், எஃகு மற்றும் உற்பத்தித் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாகத் தனிநாடு தொடர்பான வாக்கெடுப்பை (Referendum) நடத்துவதைத் தவிர்க்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவிக் காலம் நிறைவடையும் வரை தனிநாடு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படாது என்று பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமொண்டன் (Paul St-Pierre Plamondon) உறுதியளித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் தற்போதைய ஆளும் கட்சியான ‘கொவாலிஷன் அவனீர் கியூபெக்’ (CAQ) கட்சியின் தலைவரும் கியூபெக் முதல்வருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette), அமெரிக்காவின் பொருளாதாரக் கெடுபிடிகளுக்கு எதிராக கியூபெக் மாகாணத்தின்
நலன்களை உறுதியாகப் பாதுகாப்பதே, தமது முதன்மை இலக்கு எனப் பிரசாரம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சீரற்ற வர்த்தகக் கொள்கைகளே இத்தேர்தலில் தமக்கு முதன்மைப் போட்டியாளராக விளங்குவதாகவும் கிறிஸ்டின் பிரெஷெட் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மாகாணத்தில் நிலவும் விலைவாசி உயர்வு, வீட்டு வசதிப் பற்றாக்குறை, சுகாதாரத் துறை நெருக்கடிகள் மற்றும் 7.2 பில்லியன் டொலர் வரை உயர்ந்துள்ள வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை முதலானவை, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

