மொன்றியல் பெருநகரப் பிராந்தியத்திற்குட்பட்ட சவுத் ஷோர் (South Shore) பகுதியின் நகர மேயர்கள், பொதுப் போக்குவரத்து அமைப்பில்
உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மாகாண அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
உள்ளூர் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தல், கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும் புதிய போக்குவரத்துப் பாதைகளை உருவாக்குதல் மற்றும் நகராட்சிகளுக்குச் சுமையற்ற நிதி மாதிரியை நடைமுறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை அவர்கள்
முன்வைத்துள்ளனர்.
மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரசபையான ARTM அமைப்பிற்கு நகராட்சிகள் வழங்கும் நிதிப் பங்களிப்பு, 2026 முதல் 2029
ஆம் ஆண்டிற்குள் சராசரியாக 215 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெர்சியர் (Mercier) நகர மேயரும் ரூசில்லன் (Roussillon) பிராந்தியப் பகுதியின் தலைவருமான லிஸ் மிஷோ (Lise Michaud), "பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பாக தாம் பல வருடங்களாக கவலை தெரிவித்து வருவதாகவும் ஆனால் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மான்ட்-சென்ட்-ஹிலாரி (Mont-Saint-Hilaire) நகர மேயர் மார்க்-அன்ட்ரே கெர்ட்டின் (Marc-André Guertin) குறிப்பிடுகையில்,
பிராந்திய போக்குவரத்துத் தீர்மானங்களை எடுக்கும் குழுக்களில் உள்ளூர் நகராட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல, ஷாம்பிளி (Chambly) நகர மேயர் அலெக்ஸாண்டிரா லேபே (Alexandra Labbé), REM மின்சார ரயில் சேவை ஒரு சிறந்த சேர்க்கை எனக்
குறிப்பிட்ட போதிலும், அந்த நிலையங்களை அடைவதற்கான உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மாகாணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுப் போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்துதல், முறையான நிதிப் பங்கீட்டை உறுதிசெய்தல் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் நகராட்சிகளைப் பங்கெடுக்கச் செய்தல் ஆகிய கோரிக்கைகளுக்குத் தெளிவான வாக்குறுதிகளை வழங்க வேண்டும் என சவுத் ஷோர் பகுதியின் மேயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


