மொன்றியல் நகரப் பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அச்சுறுத்துதல், துன்புறுத்துதல் அல்லது அவமதிக்கும் வகையில்
பேசுவோருக்கு 2,000 கனடிய டொலர் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டமூலம் குறித்து மொன்றியல் மாநகரசபை (Montreal City Council)
ஆராயவுள்ளது.
மொன்றியல் மேயர் சொராயா மார்ட்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்திற்கு மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர்.
நகரமன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இச்சட்டமூலத்தின்படி, கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அச்சுறுத்துதல், துன்புறுத்துதல், அவமதித்தல், வாய்மொழி வசைபாடுதல் அல்லது அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் குற்றம் எனக் கருதப்படும்.
இக்குற்றச்சாட்டில் முதன்முறையாகச் சூட்டப்படுபவர்களுக்கு 350 டொலர் முதல் 1,000 டொலர் வரையிலும், இரண்டாவது முறை குற்றமிழைத்தால் இரட்டிப்பாக 2,000 டொலர் வரையிலும் அபராதம் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
2019 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மாநகரசபை ஊழியர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும்
அவமரியாதையான நடத்தைகள் 250 சதவீதத்திற்கும் அதிகமாகஅதிகரித்துள்ளதாக மொன்றியல் மாநகரசபை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, கடந்த 2025 ஜூன் மாதம் வாகனச் சோதனையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை பெண் வெறுப்புச் சொற்களால் திட்டி, அதை
காணொளியாகப் பதிவு செய்து ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்தகைய சம்பவங்களில் இருந்து ஊழியர்களைப் பாதுகாக்கவும், நாகரீகமான சூழலை உருவாக்கவுமே இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக
மாநகரசபை தெரிவிக்கிறது.
இதேவேளை, கனடிய சிவில் உரிமைகள் சங்கம் (CCLA) மற்றும் லிக் டெஸ் டிரோய்ட்ஸ் எட் டெஸ் லிபெர்ட்டெஸ் (Ligue des droits et libertés) ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சட்டமூலம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அச்சுறுத்தலாக இல்லாத, சாதாரணக் கருத்துக்களைக் கூட அவமதிப்பு எனக் கூறி பொலிஸார் அபராதம் விதிக்க அதிகாரம் அளிப்பது, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான அதிகார ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கும் என கனடிய சிவில் உரிமைகள் சங்கத்தின் கியூபெக் பிரதிநிதி அனாய்ஸ் புஸியரெஸ் மெக்நிகோல் (Anaïs Bussières McNicoll) தெரிவித்துள்ளார்.
மேலும், இது கறுப்பின, பழங்குடியின மற்றும் அரபுச் சமூகங்களைச் சேர்ந்த மக்களை பொலிஸார் இலக்கு வைக்கும் 'இனரீதியான வகைப்படுத்தல் (Racial profiling) நடவடிக்கைகளுக்கே வழிவகுக்கும் என்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத் தக்கது.


