கியூபெக் மாகாணத்தின் பில் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை, கனடிய உச்ச நீதிமன்றத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தனிமனித உரிமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. விசாரணையின் போது, மாகாண அரசுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கு அதிகாரத்தை (Notwithstanding Clause) வரம்பின்றிப் பயன்படுத்தினால் என்னவாகும் என்பது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
எதிர்காலத்தில் ஒரு சர்வாதிகாரி கனடாவில் ஆட்சிக்கு வந்து, அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய இந்த விதியைப் பயன்படுத்தினால் நீதித்துறை என்ன செய்யும்? எனத் தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவில் நிலவுவது போன்ற அரசியல் சூழல் கனடாவிலும் ஏற்பட்டால், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது.
இதேவேளை, இந்த வழக்கில் நாட்டின்ன் மற்ற மாகாணங்கள் இரு வேறு நிலப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஒன்ராறியோ, அல்பேர்ட்டா மற்றும் சஸ்காச்சுவான் ஆகிய மாகாணங்கள் கியூபெக் அரசின் அதிகாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேவேளை, மத்திய அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்கள் முதலானவை, உரிமைகள் மீறப்படும் போது நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் வேண்டும் என வாதிட்டுள்ளன. குறித்த சட்டம் மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பைத் தலைமை நீதிபதி தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
