கியூபெக் மாகாணத்தில் இன்ஃப்ளூயன்சா ஏ (H3N2) வகை காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவதாக மாகாணத்துக்கான பொதுச் சுகாதார இயக்குநர் டாக்டர் கரோலின் குவாச் (Dr. Caroline Quach) எச்சரித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலக் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் வேளையில், மக்கள் அடிப்படைச் சுகாதார முறைகளை மீண்டும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
காய்ச்சல் பரவும் காலமானது, இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கியுள்ளது. குறிப்பாக, மொன்றியலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் திணறி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவுகள் (ER) அவற்றின் கொள்ளளவை விட 147% அதிகமாக நிரம்பியுள்ளன. கியூபெக் மாகாணத்தில் தற்போது பரவி வரும் H3N2 கிருமியானது மரபணு மாற்றமடைந்துள்ளதால், அது மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி, எளிதில் பரவும் தன்மை கொண்டதாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.
