கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான
பெரும்பான்மை கிடைக்காமல், சிறுபான்மை அரசு (Minority Government) அமையக்கூடும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய களநிலவரப்படி, ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில் பார்ட்டி கியூபெக்கோயிஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
வெளியாகியுள்ள புதிய தேர்தல் ஆய்வுகளின்படி, தற்போதைய ஆளும்கட்சியான கொஅலிஷன் அவனீர் கியூபெக் கட்சி 22.1 சதவீத மக்கள்
ஆதரவைப் பெற்றுள்ளது.
கியூபெக் லிபரல் கட்சி 21.5 சதவீத ஆதரவுடன் கடும் போட்டியை வழங்கி வருகிறது. கன்சர்வேட்டிவ் கட்சி 16.1 சதவீத மக்களின் ஆதரவையும் கியூபெக் சொலிடேர் கட்சி 10.3 சதவீத மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கிய கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதால், பொதுவாக்குகளை விட, கியூபெக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையே ஆட்சியை யார் அமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பார்ட்டி கியூபெக்கோயிஸ் கட்சித் தலைவர் போல் சென்-பியர் பிளாமொண்டன் (Paul St-Pierre Plamondon), கியூபெக் மாகாணத்தின்
தனித்துவமான இறையாண்மை மற்றும் சுதந்திரம் குறித்த தனி வாக்கெடுப்பை (Referendum) நடத்தும் வாக்குறுதியுடன் பிரசாரத்தை
முன்னெடுத்து வருகிறார். இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்குச் சுமார் 130 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதுவே தற்போது இத்தேர்தலின் பிரதான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதேவேளையில், கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தலைமையிலான ஆளும்கட்சியான CAQ, தனது செல்வாக்கை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக தலைவர்களுக்கு இடையிலான நேரடி விவாதங்கள் நடைபெறவுள்ளதால், வாக்காளர்களின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


