மொன்றியல் நகரில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக வீடுகளுக்குள் அத்துமீறி நுழைதல், திருட முயற்சித்தல் மற்றும் கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக மொன்றியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய நபி பாங்குரா (Naby Bangoura) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இந்த மாதக் காலப்பகுதியில், மொன்றியலின் மெர்சியர்-ஹோசெலாகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve), அஹுன்ட்சிக்-கார்டியர்வில் (Ahuntsic-Cartierville), பிளேட்டோ-மொன்-ரோயல் (Plateau-Mont-Royal) மற்றும் ரோஸ்மொன்ட்-லா பெட்டிட்-பாட்ரி (Rosemont–La Petite-Patrie) முதலான நான்கு முக்கிய பிராந்தியங்களில் ஒரு டசனுக்கும் அதிகமான வீடுகளில் இந்தத் தொடர் திருட்டுகளைப் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபி பாங்குராவுக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதாகவும், கடந்த 2024ஆம் ஆண்டிலும் வீடமைப்புத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தண்டனை அனுபவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.




