மொண்ட்ரியல் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள டோர்வல் (Dorval) நகரில் வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மொண்ட்ரியல் மாநகர பொலிஸார் (SPVM) உத்தியோகபூர்வமாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் நால்வர் மீதும் முதலாம் நிலை திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டு (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி இரவு, டோர்வல் நகரின் மிமோசா மற்றும் கார்சன் (Carson Ave) வீதிகளின் சந்திப்புக்கு அருகில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், உடலின் மேல் பகுதியில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் அந்த ஆண்டின் மொண்ட்ரியல் பிராந்தியத்தின் 35ஆவது கொலைப் பதிவாக (35th homicide of 2022) உத்தியோகபூர்வமாகக் குறிக்கப்பட்டது.
இந்தக் கொலை நடந்து மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், பொலிஸாரின் தீவிரப் புலனாய்வின் மூலம் இருபதுகளில் இருக்கும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் காணொளி வாயிலாக(Videoconference) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களும் 22 முதல் 26 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


