கியூபெக் மாகாண அரசின் நடப்பு பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அரசியல் வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகப் போவதாக, தொழிலாளர் துறை அமைச்சர் ஜீன் போலெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் கியூபெக் மாகாண பொதுத்தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய ஆளுங்கட்சியான CAQ-விலிருந்து அடுத்தடுத்து முக்கிய அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி வரும் நிலையில், போலெட்டின் இந்த முடிவு கியூபெக் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை தனது சொந்தத் தொகுதியான ‘துரோயிஸ்-ரிவியர்ஸ்’ அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜீன் போலெட், இந்த முடிவை அறிவிக்கும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார்.
தற்போதைய கியூபெக் மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்டின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் குaறிப்பிட்ட ஜீன் போலெட், முன்னாள் முதலமைச்சர் ஃபிரான்சுவா லெகால்ட் (François Legault) தமக்கு வழங்கிய ஆதரவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தொழிலாளர் நல வழக்கறிஞரான (Labour lawyer) ஜீன் போலெட், கடந்த 2018 ஆம் ஆண்டு துரோயிஸ்-ரிவியர்ஸ் தொகுதியிலிருந்து முதன்முறையாக, கியூபெக்கின் சட்டமன்றத்திற்குத் (National Assembly) தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


