கனடாவின் பிரதமர் மார்க் கார்னியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை, அடுத்த 30 நாட்களுக்குள் விரைவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
இருதரப்பு உறவுகளில் பல மாதங்களாக நீடித்து வந்த வர்த்தகப் பதற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பணிகளை, இந்த உச்சிமாநாட்டிலும் அடுத்து வரும் வாரங்களிலும் தாம் முன்னெடுத்துச் செல்வதற்கு ஆவலுடன் உள்ளதாக, மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் சிறப்பான விளைவுகளுள் ஒன்றாக இது நோக்கப்படுகின்றது.
ஜி7 உச்சிமாநாட்டில் தனது முக்கிய கவனம் “கனடாவுடனான வர்த்தகம்” மீதே இருக்கும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார்.
கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பதற்றங்கள் “தீர்க்கப்படக்கூடியவை” என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.