முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லி ஆங்கஸ் (Charlie Angus), தற்போது கனடாவின் இறையாண்மையைக் காப்பதற்கானதெனக் கூறப்படும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக “ரெசிஸ்டன்ஸ்” (The Resistance) என்ற பெயரில், கனடா முழுவதும் ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
”கனடாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துவிட்டது” என எச்சரிக்கும் ஆங்கஸ், டிரம்ப்பின் பொருளாதாரப் போரைச் சமாளிப்பதற்காக, கனடியர்கள் ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
‘MeidasCanada’ என்ற யூடியூப் சேனல் மூலம் டிரம்ப்பின் கொள்கைகளை விமர்சித்து சார்லி ஆங்கஸ் வெளியிடும் வீடியோக்கள் பல லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணித்து, அந்தப் பணத்தைக் கனடாவின் உள்ளூர் சமூகங்களின் வளர்ச்சிக்காகச் செலவிட வேண்டும் என்று சார்லி ஆங்கஸ் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


