கனடாவின் உச்ச நீதிமன்றம், தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச்சட்டத்திற்கு எதிராக இலங்கையை சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதுடன், இனப்படுகொலை கல்வி வாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
கனடா நீதிமன்றம், இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் அரசமைப்பிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்ததை தொடர்ந்து இலங்கை, கனடா செயற்பாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையிலேயே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கனடா அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் செயற்படுகின்றது, கருத்து சுதந்திரம் சமத்துவ உரிமைகளை மீறுவதாக தெரிவித்திருந்த இலங்கை அமைப்பு, தமிழ் இனப்படுகொலை குறித்த மாற்றுக்கருத்துக்களை முடக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
எனினும் அந்த அமைப்பின் வேண்டுகோளை நிராகரித்துள்ள கனடாவின் உச்ச நீதிமன்றம், இனப்படுகொலை கல்விவாரச்சட்டம் கனடாவின் அரசமைப்பிற்குட்பட்டது. அது பாரபட்சமான தாக்கங்களை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விஜய் தனிகாசலம் Act 104 தமிழ் இனப்படுகொலை வார சட்டத்திற்கு எதிராக தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை கனடா உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும், என ஒண்டாரியோ மாகாண துணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் டக் ஃபோர்டு, எனது சட்டமன்ற உறுப்பினர்கள் , மற்றும் 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக மசோதா 104ஐப் பாதுகாக்க அயராத முயற்சிகள் உதவிய தமிழ் இளைஞர்கள் ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கனடா உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இதுவாகும் , இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட இந்த தீர்ப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது மற்றும் தமிழ் இனப்படுகொலைக்கான நீதிக்கான உலகளாவிய இயக்கத்தில் ஒரு மைல்கல்லாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.