நாளைய தினம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 2026 தேர்தலை மனதில் வைத்து விஜய் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் கடந்தாண்டு அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தையும் விஜய் நடத்தினார். ஹெச் வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய், மற்றொருபுறம் அரசியலிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
முக்கிய பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்க எந்தவொரு இடத்திலும் தவறுவதில்லை. மேலும், இடையில் ஆளுநர் ஆர்.என். ரவியையும் சந்தித்துப் பேசியிருந்தார். தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு கட்சியின் இரண்டாவது ஆண்டு விழாவிலும் அதிரடியாகப் பேசி தனது கட்சியின் இலக்கை தெளிவுபடுத்தினார். அந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது. விஜய்யைப் பொறுத்தவரை 2026 தேர்தல் தான் இலக்கு என்பதில் தெளிவாக இருக்கிறார். கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே கட்சியைப் பதிவு செய்தாலும் 2026 தேர்தலில் தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே நாளைய தினம் தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில், அதில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு ஒருமுறையாவது பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி நாளைய தினம் தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் 2100 பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.