கியூபெக் மாகாணத்தில் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சிறார் பாதுகாப்பு அமைப்பின் கட்டமைப்பைப் பரிசீலிக்கவும் அமைக்கப்பட்ட புதிய சிறார் நலன் மற்றும் உரிமைகள் ஆணைக்குழு தனது விசாரணைகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
கியூபெக் சிறார் பாதுகாப்பு அமைப்பின் (Youth Protection Services) கண்காணிப்பில் இருந்த குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்தே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மொன்றியலில் உள்ள பாட்ஷா சிறுவர் மற்றும் குடும்ப மையங்களின் (Batshaw Youth and Family Centres) கண்காணிப்பிலும் காத்திருப்புப் பட்டியலிலும் இருந்த மூன்று சிறுவர்கள் குறுகிய கால இடைவெளியில் உயிரிழந்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
”இதனைத் தொடர்ந்து, மாகாண சிறார் பாதுகாப்பு அமைப்பில் நிலவும் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
சமூகப் பணியாளரின் முதல் வருகைக்காக மாதக்கணக்கில் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான்.
உள்நாட்டுப் பத்திரிகையின் புலனாய்வுத் தகவல்களின்படி, கடந்த மார்ச் மாதத்தில் பாட்ஷா மையத்தின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பில் இருந்த மூன்று சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கியூபெக் மாகாணத்தில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் மேரி-ஈவ் புருனெட் கிச்சன் (Marie- Eve Brunet Kitchen), சிறுவர் நலன் தொடர்பான மூன்று முக்கிய முறைசார் விசாரணைகளை முறைப்படி தொடங்கியுள்ளார்.

