மொன்றியல் பிராந்தியத்தில் இளைஞர் சமூகப் பணியாளராகப் பணியாற்றி வந்த 35 வயதான நபர் ஒருவர், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் மேலும் பல சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், பொதுமக்கள் தகவல்களை வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் திரிஸ்தான் டுசேனே (Tristan Duchesne) என அடையாளம் காணப்பட்டுள்ளார். லோங்கய்ட் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை, சிறுவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துதல், இணையம் அல்லது ஊடகங்கள் மூலம் சிறுவர்களைப் பாலியல் வலையில் வீழ்த்துதல், பாலியல் ரீதியான ஆபாசக் காட்சிப் பொருட்களைப் பகிர்தல் மற்றும் அணுக வசதி செய்தல் முதலான தீவிர குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபரான திரிஸ்தான் டுசேனே மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான திரிஸ்தான் டுசேனே, மொன்றியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் இளைஞர் நல சமூகப் பணியாளராகப் (Youth Social Worker) பணியாற்றி வந்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பைப் பயன்படுத்தி இவர் இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவரால் பாதிக்கப்பட்ட மேலும் பல சிறுவர்கள் அல்லது சாட்சியங்கள் சமூகத்தில் இருக்கலாம் என்பதால், விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல்கள், புகார்கள் அல்லது சாட்சியங்கள் வைத்திருப்போர் உடனடியாக பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

