கனடாவைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவில் விடுமுறைக்குச் செல்வது குறைந்துள்ளதால், கனடிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானசேவைத் திட்டங்களை மாற்றி வருகின்றன.
மேலும் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
இதனால், கனேடிய விமான நிறுவனங்கள் கனடாவுக்குள்ளும் மற்ற நாடுகளுக்கும் அதிகமான விமான சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
தற்போதைய அரசியல் சூழ்நிலையும் பணமாற்று விகிதங்களில் உள்ள வேறுபாடுகளுமே அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகள் குறைவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று வெஸ்ட்ஜெட் விமானசேவை நிறுவனம் கூறுகிறது.
அடுத்த ஆறு மாதங்களுக்கு அமெரிக்காவுக்கான பயண முன்பதிவுகள், 10 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக ஏர் கனடா விமானசேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பயணத்தில் இவ்வளவு பெரிய சரிவு ஏற்படுவது அசாதாரணமானது என, விமானப் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான Cirium தெரிவிக்கின்றது.
முக்கிய கனடிய நகரங்களிலிருந்து பிரபலமான அமெரிக்கப் பிரதேசங்களுக்கான கோடைக்கால முன்பதிவுகள் கடந்த ஆண்டை விடவும் ஏறத்தாழ 20 சதவீதமளவு குறைந்துள்ளதாக, Cirium இன் ஆய்வுமுடிவுகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, அதிகமான கனடியர்கள் தங்கள் விடுமுறைக்காலத்தில் கனடாவுக்குள்ளே பயணம் செய்வதற்காக விமானங்களை முன்பதிவு செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பிரபலமான கனடிய பிரதேசங்களுக்கான ஜூலை மாத முன்பதிவுகள் கடந்த ஆண்டை விட சுமார் 11 சதவீதம் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
