கியூபெக் மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து விலகவுள்ள பிரான்சுவா லெகோ (François Legault), தனது இறுதி உரையில் மொன்றியல் நகரில் பிரெஞ்சு மொழியின் நிலை குறித்துப் பெரும் கவலையை வெளியிட்டுள்ளார்.
தமது உருக்கமான பிரியாவிடை உரையின்போது, “மொன்றியலைப் பார்க்கும் போது எனக்குப் பயமாக இருக்கிறது; பிரெஞ்சு மொழி அங்கு வீழ்ச்சியடைந்து வருகிறது” என அவர் எச்சரித்தார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகக் கியூபெக் மாகாணத்தை வழிநடத்திய லெகோ, பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதே தனது வாழ்நாள் இலட்சியமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.
பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியைத் தடுக்கும் பொறுப்பு இங்குள்ள ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் உண்டு என்று குறிப்பிட்ட பிரான்சுவா லெகோ, அனைவரும் இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தைப் போலப் பிரெஞ்சு மொழி இங்கும் வழக்கொழிந்து போகும் அபாயம் உள்ளது” என சுட்டிக்காட்டினார்.
கியூபெக் மாகாணத்தின் கலாசாரம் மற்றும் மொழி அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகத் தான் கொண்டுவந்த ‘மசோதா 96’ போன்ற சட்டங்களின் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கியூபெக் அரசியலில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய பிரான்சுவா லெகோவின் இந்த இறுதி எச்சரிக்கை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொழி மற்றும் கலாசார விவகாரங்களை முக்கிய பேசுபொருளாக மாற்றியுள்ளது.
