கியூபெக் மாகாணத்தை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றுக்கொண்டால், கனடாவிலிருந்து பிரிந்து தனிநாடாவதற்கான பொதுவாக்கெடுப்பை நிச்சயம் நடத்தவுள்ளதாக பார்ட்டி கியூபெக்குவா (Parti Québécois – PQ)கட்சியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பார்ட்டி கியூபெக்குவா கட்சித் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டனின் அறிவிப்புக்கு கியூபெக்கின் முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தொலைக்காட்சிகளில் நடைபெற்ற அரசியல் தலைவர்களின் முக்கிய விவாத நிகழ்வுகளின் போதே, இந்த விவாதம் தீவிரமடைந்தது. ஆளும் கூட்டணியான கொவாலிசியன் அவனீர் கியூபெக்(CAQ) கட்சியின் தலைவரும் கியூபெக்கின் புதிய முதலமைச்சருமான கிறிஸ்டின் பிரெஷெட்,
கனடாவை வெறுப்பது ஒரு சமூகத்திற்கான எதிர்காலத் திட்டமாக முடியாது.” என்றும் ’அதேவேளையில் மத்திய அரசாங்கத்தின் முன் மண்டியிடுவதும் நமது அணுகுமுறை அல்ல.’ என்றும் குறிப்பிட்டார். கியூபெக்கில் மீண்டும் ஒரு தனிநாடு வாக்கெடுப்பு சூழல் உருவாவதை நாம் தடுத்தாக வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வர்த்தகத் தடைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் நிலவும் இக்காலகட்டத்தில், கனடாவுடனான உறவைத் துண்டிப்பது மாகாணப் பொருளாதாரத்தைப் கடுமையாகப் பாதிக்கும் என்றும், தாம் கனடா கூட்டாட்சிக்குட்பட்ட கியூபெக் தேசியவாதியாகச் செயல்பட விரும்புவதாகவும் பிரெஷெட் சுட்டிக்காட்டினார்.
கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான பார்ட்டி கியூபெக்குவாவின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) பேசுகையில், அடுத்த தேர்தலில் தமது கட்சி சிறுபான்மை அரசாக ஆட்சி அமைத்தாலும் கூட, கியூபெக்கின் தனிநாடு தொடர்பான பொதுவாக்கெடுப்பை நடத்தும் வாக்குறுதியை
நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.
மேலும், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னரே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், கியூபெக் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தமது கடமை என்றும் பிளாமண்டன் குறிப்பிட்டார்.
லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மிலியார்ட் (Charles Milliard) கருத்து தெரிவிக்கையில், கனடாவுடன் இணைந்து வாழ விரும்பும் கியூபெக் மக்களுக்கு லிபரல் கட்சியே ஒரே நம்பிக்கையான தெரிவு என்றும், இக்கட்டான பொருளாதாரச் சூழலில் கூட்டாட்சி உறவை முறிப்பது பெரும் ஆபத்தானது என்றும் எச்சரித்தார்.
அதேவேளையில், கியூபெக் சொலிடேர் (Québec solidaire) கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ரூபா கஸால் (Ruba Ghazal), ”கியூபெக்கின் சுதந்திரம் என்பது தனிநபர் அரசியல்வாதிகள் சார்ந்ததாக இருக்கக்கூடாது மக்களின் ஒட்டுமொத்த முடிவாகவே அமைய வேண்டும்” என்றார்.
கியூபெக்கில் ஏற்கனவே 1980 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் கனடாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான இரு பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே (50.58% எதிராக 49.42%) கியூபெக் கனடாவுடன் தொடர்வது உறுதி செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் கியூபெக் தனிநாடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளமை கனடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தொலைக்காட்சிகளில் நடைபெற்ற அரசியல் தலைவர்களின் முக்கிய விவாத நிகழ்வுகளின் போதே இந்த விவாதம் தீவிரமடைந்தது.

