மொண்ட்ரியல் நகரில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற சர்வதேச வீதி மிதிவண்டிச் சாம்பியன்ஷிப் (UCI Road World Championships) தொடரின் போது, மொண்ட்ரியல் நகராட்சியின் சுமார் 6,000 தொழிலாளர்கள் (Blue-collar workers) 7 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு மற்றும் கூட்டு ஒப்பந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மொண்ட்ரியல் நகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கம் முன்னெடுத்திருந்தது.
எனினும், மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் எனத் தொழிற்சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மொண்ட்ரியல் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச மிதிவண்டிச் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முன்னணி மிதிவண்டி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
உலகளவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொலைக்காட்சிகள் வாயிலாகவும், 5 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரடியாகவும் இந்த நிகழ்வைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய முக்கியமான சர்வதேச நிகழ்வு நடைபெறும் காலப்பகுதியிலேயே, மொன்றியல் நகராட்சியின் தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.



