நீண்ட இடைவேளைக்குப் பிறகு கியூபெக் மாகாண அரசியலில் லிபரல் கட்சி (PLQ) மீண்டெழுந்துள்ளது.
அண்மையில் வெளியான லெஜர் (Léger) கருத்துக் கணிப்பின்படி, எதிர்க்கட்சியான லிபரல் கட்சியும், பிரிவினைவாதத்தை முன்னிறுத்தும் பார்ட்டி கியூபெக்வா கட்சியும் தற்போது சமமான மக்கள் ஆதரவுடன் மோதுகின்றன.
லிபரல் கட்சியின் புதிய தலைவராக சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard) பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்கு இருந்த மக்கள் ஆதரவு சடுதியாக அதிகரித்துள்ளது.
வர்த்தகத் துறையில் அனுபவம் மிக்க மில்லியார்ட், கியூபெக்கின் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திப் பேசுவது வாக்காளர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.
பாரம்பரியமாக லிபரல் கட்சிக்கு ஆதரவு தராத பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் மத்தியிலும் தற்போது 19 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
கியூபெக் தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கைக்கான ஆதரவு 29 சதவீதமாகக் குறைந்துள்ளமை, இந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு முக்கிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.
