மொன்றியல் நகரில், அதீத வேகத்தில் காரை ஓட்டி, வீதிப் பாதுகாப்பு விதிகளுக்குப் பெரும் இடையூறாக விளங்கிய 23 வயது இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் சாட்டவுக் (Châteauguay) பிராந்தியத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
நெடுஞ்சாலை 20 மேற்கில் (Highway 20 West) மணிக்கு 70 கி.மீ மட்டுமே செல்லக்கூடிய கட்டுப்பாட்டுப் பகுதியில், அந்த இளைஞர் மணிக்கு 217 கி.மீ வேகத்தில் காரைச் செலுத்தியுள்ளார். இது அனுமதிக்கப்பட்ட வேக எல்லையை விட 140 கி.மீ க்கும் அதிகமாகும். அந்த இளைஞரின் வாகனைத்தைத் துரத்திக் கைப்பற்றிய இந்தச் செயற்பாட்டில், கியூபெக் மாகாணப் பொலிஸாருடன் கானவாகே பழங்குடியினப் பாதுகாப்புப் படையினரும் பங்கேற்றுள்ளனர்.
இறுதியாகப் பொலிஸ் வாகனத்தின் மீது சந்தேக நபரின் கார் மோதி உருக்குலைந்ததுடன், துரத்தும் நடவடிக்கை நிறைவடைந்தது. இந்த அதிவேகப் பின்தொடர்தல் மற்றும் மோதலில் யாருக்கும் எவ்வித உடல் காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 23 வயது இளைஞனின் ஓட்டுநர் உரிமம் உடனடியாக 7 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வாகனம் 30 நாட்களுக்குப் பொலிஸாரால் பறிமுதல் (Impounded) செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை, பொலிஸாரின் கடமைக்கு முட்டுக்கட்டையிட்டுத் தப்பியோட முயன்றமை மற்றும் பொலிஸ் வாகனத்தை மோதியமை (Armed assault) உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாக கியூபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


