கியூபெக் மாகாணத்தில் உள்ள ரூயின்-நொராண்டா நகரில், கிளென்கோர்
நிறுவனத்திற்கு சொந்தமான ஹோர்ன் இரும்புத் தொழிற்சாலை மீது
சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த இரும்புத் தொழிற்சாலையில் இருந்து
வெளியேறிய நச்சுத்தன்மை வாய்ந்த கருப்பு நிறத் தூசு, ஒரு பள்ளி வளாகம்
உட்பட பல குடியிருப்புப் பகுதிகளில் படிந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டே, இக்குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்காக குறைந்தபட்சம் $30,000 அபராதம் விதிக்கப்படலாம்.
மார்ச் 7, 2023 அன்று நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கியூபெக்
சுற்றுச்சூழல் அமைச்சகம் விசாரணை நடத்தியது.
"கருப்புப் பனி" என்று உள்ளூர் மக்களால் விவரிக்கப்பட்ட இந்தத் தூசு,
நாசரேத்து அன்னை பாதுகாப்பு (Notre-Dame-de-Protection)
தொடக்கப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அதிக அளவில்
படிந்திருந்தது.
