கியூபெக் மாகாணத்தில் கோடைகால தொடக்கத்தில் பரவத் தொடங்கிய தட்டம்மை (Measles) நோய் பரவல் தற்போது முற்றாக முடிவுக்கு வந்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகாததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கியூபெக் சுகாதார அமைச்சின் விதிகளின்படி, தட்டம்மை நோய்த்தொற்று உடைய கடைசி நோயாளி கண்டறியப்பட்டு 32 நாட்கள் எவ்வித புதிய பாதிப்புகளும் பதிவாகாமல் இருந்தால் மட்டுமே நோய் பரவல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படும்.
கியூபெக்கில் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதியன்றே கடைசி தட்டம்மை நோயாளி பதிவாகியிருந்தார்.
அதன்படி, நோய் அரும்பும் காலம் (Incubation period) மற்றும் வைரஸ் பரவும் அதிகபட்ச காலம் உள்ளடங்கலாக நிர்ணயிக்கப்பட்ட 32 நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், தட்டம்மை நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகக் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

