கியூபெக் மாகாண மக்கள் அனைவரின் மருத்துவக் குறிப்புகளையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தைப் புறக்கணித்துவிட்டு, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கியூபெக் அரசு தீர்மானித்துள்ளது.
கியூபெக் சுகாதார அமைச்சகம் மேற்கொண்டு வந்த வருங்கால சுகாதாரப் பதிவு (Health Record of the Future) என்ற 2 பில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்திலிருந்து, முன்னணியிலிருந்த அமெரிக்க நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள இந்தத் தகவலின்படி, தொழில்நுட்பக் கோளாறுகள், மொழிச் சிக்கல்கள் மற்றும் மக்களின் தரவுப் பாதுகாப்பு (Data Privacy) குறித்த அச்சம் காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திலிருந்து அமெரிக்க நிறுவனம் வெளியேற்றப்பட்டதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன. கியூபெக்கின் புதிய மொழிச் சட்டங்களுக்கு ஏற்ப, பிரெஞ்சு மொழியில் மென்பொருளை மாற்றியமைப்பதில் அந்த அமெரிக்க நிறுவனத்திற்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
திட்டம் முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பே, நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட 150 மில்லியன் டொலர் நிதி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
கியூபெக் மக்களின் மிக ரகசியமான மருத்துவக் குறிப்புகள் ஆனவை அமெரிக்கச் சட்டங்களுக்கு உட்பட்ட தரவுச்சேமிப்பகங்களில் சேமிக்கப்படுவதை சுகாதார ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
இந்த நிலையில்,சான்டே கியூபெக்(Santé Québec) என்ற மாகாண அரசு நிறுவனமே இனி இந்தத் திட்டத்தை நேரடியாகக் கவனிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன், மாகாணத்திற்குள்ளேயே தரவுத் தளங்களை (Database) உருவாக்கிப் பராமரிக்க கியூபெக் அரசு முடிவு செய்துள்ளது.

