ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பேருந்து மற்றும் புகையிரதங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவோரைக் கைது செய்யும் அதிகாரத்தைப் போக்குவரத்து விசேட காவலர்களுக்கு (Special Constables) வழங்குவதற்கு அந்த மாகாண அரசு தீர்மானித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஒன்டாரியோவின் சொலிசிட்டர் ஜெனரல் மைக்கேல் கெர்ஸ்னர் (Michael Kerzner) புதிய சட்ட மாற்றங்களை அறிவித்தார்.
இதன்படி, டொரண்டோ (TTC), கோ ட்ரான்ஸிட் (GO Transit) மற்றும் ஒட்டாவா (OC Transpo) ஆகிய போக்குவரத்துச் சேவைகளில் பணியாற்றும் விசேட காவலர்கள், இனி சட்டவிரோத போதைப்பொருள் பயன்படுத்துவோரை நேரடியாகக் கைது செய்ய முடியும்.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இத்தகைய கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பொலிஸாருக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது.
புதிய மாற்றத்தின் படி, போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டால், விசேட காவலர்கள் முதலில் அவர்களை நிறுத்துமாறு எச்சரிப்பார்கள் அல்லது அபராதம் விதிப்பார்கள் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தினாலோ அல்லது அந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்தாலோ, விசேட காவலர்கள் அவர்களைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைப்பார்கள். இக்குற்றத்திற்காக 10,000 டொலர்கள் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதென்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
