மொன்றியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் (YUL) 10 பில்லியன் டொலர் விரிவாக்கத் திட்டம் ஆனது, அப்பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என உள்ளூர் தாய்மார்கள் எச்சரித்துள்ளனர்.
Mothers at the Front என்ற அமைப்பைச் சேர்ந்த தாய்மார்கள் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தின் 10 ஆண்டுகால நவீனமயமாக்கல் திட்டத்திற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
புதிய தங்குமிடங்கள் மற்றும் கூடுதல் விமான சேவைகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம், முறையான பொதுமக்களின் கருத்துக்கேட்பு அல்லது ஆரோக்கியம் குறித்த ஆய்வு ஏதுமின்றி அவசரமாகச் செயல்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசுபாடு முதலிய காரணிகள் விமானப் பாதையின்கீழ் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நலனைப் பாதிக்கும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விமான நிலையத்திற்கு வடக்கே உள்ள ‘மொனார்க் பட்டாம்பூச்சி’ வயல்வெளிகள் உள்ளிட்ட முக்கிய இயற்கை இடங்களின் இயற்கைத்தன்மை இந்த விரிவாக்கத்தால் அழிக்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் விமானப் போக்குவரத்து அதிகரிப்பதால் ஏற்படும் இரைச்சல், மக்களின் தூக்கத்தைக் கெடுப்பதோடு, இதய நோய்கள் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டம் முடிவடைந்து இரண்டே நாட்களில் நிர்வாகம் இறுதி முடிவை அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், இது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட “கண்துடைப்பு நாடகம்” என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில், மேலதிகமாக 24 விமானங்களை நிறுத்தும் வசதியுடன் கூடிய புதிய விரிவாக்கப் பணிகளைத் தொடங்குவதற்கு, மொன்றியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


