மொன்றியலின் செயின்ட் ஹென்றி (St-Henri) பகுதியில் வீடற்றவர்கள் தங்கியிருந்த தற்காலிகக் கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணியளவில் செயின்ட் ரெமி (St-Rémi) மற்றும் காசெலாய்ஸ் (Cazelais) வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கூடாரங்களில் தீப்பிடித்ததாக அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றது.
வில்-மேரி (Ville-Marie) அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சில நிமிடங்களிலேயே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவியாளர்கள் (Urgences-Santé) முதலுதவி அளித்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மொன்றியல் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் காயங்களின் தன்மை குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது யாராவது திட்டமிட்டுச் செய்த சதியா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது வரை இந்த விவகாரத்தில் குற்றவியல் பின்னணி இருப்பதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொன்றியல் நகரில் நிலவும் கடும் வீட்டு வசதி தட்டுப்பாடு காரணமாக, வீடற்ற மக்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய தற்காலிகக் கூடாரங்களை அமைத்துத் தங்கியுள்ளனர்.செயின்ட் ஹென்றி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற வாழ்விடங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள், இந்த விபத்தின் மூலம்மீண்டும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
