கியூபெக் மாகாணத்தின் முக்கிய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான கார்டினல் மார்க் ஓலெட் (Marc Ouellet) தொடர்ந்துள்ள அவதூறு வழக்கின் விசாரணை, நேற்று மொண்ட்ரியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில், கார்டினல் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணின் சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றவை என்று ஓலெட்டின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தன்னிடம் கார்டினல் ஓலெட் தவறாக நடந்துகொண்டதாக பமீலா குரோலோ (Pamela Groleau) என்ற பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
கியூபெக் பேராயர் அலுவலகத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு பாரிய பொதுநல வழக்கின் (Class-action lawsuit) ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, கார்டினல் ஓலெட் 1 லட்சம் டொலர் இழப்பீடு கோரி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நேற்றைய விசாரணையின் போது, கார்டினலுடன் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் மற்றும் சில மதகுருமார்கள் சாட்சியமளித்தனர்.
கார்டினல் ஓலெட் எப்போதும் கண்ணியமாகவே நடந்துகொண்டதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, சம்பவத்தின் போது உடனிருந்தவர்கள் யாரும் அத்தகைய தவறான செயல்கள் நடந்ததைப் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணின் தரப்பில் முன்னிலையான சாட்சி ஒருவர், கார்டினல் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவர் அந்தப் பெண்ணைத் தொடர்வதைப் போன்ற (Tracked) உணர்வு இருந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், இந்தக் கூற்றில் முரண்பாடுகள் இருப்பதாகவும், ஆதாரமற்ற புகார்களைக் கொண்டு ஒருவரின் கௌரவத்தைச் சீர்குலைக்க முயற்சி நடப்பதாகவும் ஓலெட்டின் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
