கனடிய ஆயுதப் படையில் பணியாற்றும் சில வீரர்கள், தீவிர வெள்ளை இனவாத மற்றும் நியோ-நாஜி (Neo-Nazi) கொள்கைகளைப் பரப்பும் ஒரு ரகசியத் திருமண இணையதளத்தில் உறுப்பினர்களாக இருந்தமை ஊடகமொன்றின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் கனடா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது ராணுவ ரீதியிலான விசாரணையைத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (DND) தொடங்கியுள்ளது.
“வைட்டேட்” எனப்படும் இந்த இணையதளம், வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே உறுப்பினராக இருக்க அனுமதிக்கும் ஒரு தளமாகும்.
வலைத்தள ஊடுருவலாளி ஒருவரால், இந்த இணையதளம் முடக்கப்பட்டு, அதில் இருந்த ஆயிரக்கணக்கானோரின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.
இதில் கனடாவைச் சேர்ந்த சுமார் 200 நபர்களின் விபரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அவர்களில் கடற்படை மற்றும் விமானப்படையில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளும் அடங்குவர்.
ஒட்டாவாவைச் சேர்ந்த ஒரு காலாட்படை வீரர் மற்றும் கனடாவின் அதிநவீன போர் விமானக் கொள்முதல் திட்டத்தில் பணியாற்றும் ஒரு பொறியியல் அதிகாரி ஆகியோர் இந்த இணையதளத்தில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
