கனேடிய மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை (Policy Interest Rate) மாற்றமின்றி 2.25% என்ற அளவிலேயே தக்கவைத்துக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக ஏழு முறை வட்டி விகிதங்களைக் குறைத்து வந்த கனேடிய மத்திய வங்கி, தற்போது அந்த வேகத்தைக் குறைத்து காத்திருந்து கவனிக்கும் கொள்கையைத் தழுவியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் புதிய இறக்குமதி வரிகள் (Tariffs) காரணமாகக் கனடியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பிடுவதற்கு இந்த இடைவெளி அவசியம் என கனேடிய மத்திய வங்கித் தலைவர் டிஃப் மெக்லெம் (Tiff Macklem) தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி மிதமான வேகத்தில் உள்ள போதிலும், சர்வதேச வர்த்தகத் தடைகள் எதிர்காலத்தில் விலைவாசியை மீண்டும் உயர்த்தக்கூடும் என கனேடிய மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
