STM எனப்படும் மொன்றியல் போக்குவரத்து சபையின் பராமரிப்புப் பிரிவு ஊழியர்கள், நீண்டகால இழுபறிக்குப் பின்னர் எட்டப்பட்ட புதிய வேலை ஒப்பந்தத்திற்கு, பெருவாரியான ஆதரவை வழங்கி அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சுமார் 2,400 பராமரிப்புப் பிரிவு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தின் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டவர்களில் 86 சதவீதமானோர் புதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த வேலைநிறுத்தப் போராட்டங்களும், போக்குவரத்துத் தடைகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளன.
இந்த புதிய ஒப்பந்தமானது ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைகளைக் குத்தகைக்கு விடுவது தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்துள்ளது.
2025 ஜூன் மாதம் முதல் 2026 ஜனவரி மாதம் வரை நான்கு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களால் மொன்றியல் மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை, ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போக்குவரத்துச் சபையின் செலவுகளைக் குறைப்பதற்கான சில விட்டுக்கொடுப்புகளையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.


