கடந்த 2024-ஆம் ஆண்டு மொன்றியலில் இடம்பெற்ற கோணார் பேட்ரிக் ஓ’லொக்லின் (Conor Patrick O’Loughlin) என்ற இளைஞரின் கொலை வழக்கில், அவரது நண்பர் நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
27 வயதான ஓ’லொக்லினை கத்தியால் குத்திக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சகோதரர்கள் மீதான இரண்டாம் நிலை கொலை வழக்கு விசாரணை தற்போது மொன்றியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த ஓ’லொக்லினின் நெருங்கிய நண்பரான ஜொனாதன் என்பவர், ஓ’லொக்லின் உயிரிழப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவரது எதிர்கால இலட்சியங்கள் மற்றும் கனவுகள் குறித்து மிக நீண்ட நேரம் பேசியதாகத் தெரிவித்தார்.
கடந்த 2024, மே மாதம் 18 அன்று இரவு, அருகில் உள்ள வீட்டிலிருந்து அதிக சத்தத்துடன் இசை ஒலித்துள்ளது.
இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், ஓ’லொக்லின் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இதேவேளை கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சகோதரர்கள் இருவரும் குறித்த சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, மொன்றியல் கேசினோவில் (Montreal Casino) ஒன்றாக இருக்கும் காணொளி ஆதாரங்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் 2024-ஆம் ஆண்டு மொன்றியலில் பதிவான 12-ஆவது கொலைக்குற்றச் செயல் என்பது குறிப்பிடத் தக்கது.
