கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ள புதிய பொருளாதார நிதியுதவி மற்றும் வரிச்சலுகைத் திட்டம் ஆனது, உண்மையில் வறிய நிலையில் உள்ள மக்களைச் சென்றடையாது எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த புதிய பொருளாதார நிதியுதவி மற்றும் வரிச்சலுகைத் திட்டம் ஆனது, மக்களின் அத்தியாவசிய வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்படுவதாக, கியூபெக் மாகாண அரசு தெரிவிக்கின்றது.
புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட் (Christine Fréchette) தலைமையிலான கியூபெக் அரசு, மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் விற்கப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கான மாகாண வரியைக் குறைப்பது உள்ளிட்ட மூன்று முக்கிய திட்டங்களை அண்மையில் அறிவித்திருந்தது.
எனினும், இத்தகைய பொதுவான வரிக்குறைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நிதி விநியோகங்கள் (Blanket Measures) சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் போதிய பலனைத் தராது என்றும், மாறாகச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்து விலைவாசியை மேலும் உயர்த்தும் ‘பணவீக்கப் பொறியாக’ (Inflationary Trap) மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிக வருமானம் ஈட்டும் செல்வந்தர்களுக்கும், மிகக் குறைந்த வருமானம் பெறும் ஏழை மக்களுக்கும் ஒரே அளவிலான வரிக்குறைப்புச் சலுகை கிடைப்பது சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கும் என, பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கியூபெக்கில் விரைவில் மாகாணத் தேர்தல் வரவிருப்பதைக் கருத்தில் கொண்டே, ஆளுங்கட்சி இத்தகைய திட்டங்களை அறிவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கியூபெக் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் இத்தகைய அவசரக் காலப் பொருளாதாரப் பொதிகளை (Affordability Package) எவ்விதத் திட்டமிடலும் இன்றி, மாகாண அரசு அறிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
